அமெரிக்காவின் ஜி.பி.எஸ்ஸை ஓரங்கட்டும் இந்தியாவின் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்
நம்ம நாட்டில் தற்பொழுது யூபிஎஸ் பற்றி தெரிந்திருக்கிறார்களோ இல்லையோ, ஜிபிஎஸ் பற்றியும் அதன் செயல்பாடுகளையும் தெரிந்து வைத்துள்ளார்கள். Global positioning system என்று சொல்லப்படும் இந்த ஜிபிஎஸ்ஸை அமெரிக்கா தன்னுடைய ராணுவ துருப்புகளின் இடம் பெயர்தலை செயற்கை கோள்கள் மூலம் கண்காணிக்க 1973 முதல் இந்த ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கினர்.
செயற்கைகோள் உதவியுடன், பூமியைக் கண்காணிக்கும் இந்த தொழில்நுட்பம் முதலில் ராணுவம், கப்பற்படை போன்ற தேச பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப் பட்டது. 90-களில் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் அதனை மாற்றியது அமெரிக்கா. நம் இந்தியாவில் பயன்படுத்தும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பமும் அமெரிக்காவின் தொழில்நுட்பமே.
அதை மாற்றும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, IRNSS எனும் Indian Regional Navigation Satelite System என்னும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது.
இந்த தொழில்நுட்பத்தை ஜி.பி.எஸ்-க்கு மாற்றாக கார், கப்பல்கள், மொபைல் போன்கள் என எல்லா இடத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மொத்தம் ஏழு செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் இந்த இந்திய தொழில்நுட்பத்திற்காக இதுவரை 4 செயற்கைகோள்கள், IRNSS-1A, IRNSS-1B, IRNSS-1C, IRNSS-1D ஆகியவை ஏற்கனவே விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளன.மீதி மூன்று செயற்கைக் கோள் களும் விரைவில் அனுப்பப்பட்டு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் என்கிறது இஸ்ரோ.
இந்தியாவுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள இதில் ஜி.பி.எஸ்-ஐ விட துல்லியமான தகவல்கள் பெறமுடியும். IRNSS தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்துவதன் மூலம், சொந்த செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்பை பயன்படுத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா,சீனாவுக்கு அடுத்து இந்தியாவும் சொந்த நேவிகேஷன் அமைப்பைப் பயன்படுத்தவுள்ளது.
Discussion about this post