இந்த கும்ப ராசி ,ராசிகளில் ஜட ராசி (உயிர் அற்ற ராசி ) என்பதாலும்,ஸ்திர ராசியாக இருப்பதாலும் இவர்களுக்கு (பெரும்பாலானவர்களுக்கு) கல்வியில் அதிக ஆர்வம் இருக்காது.சுமாரான கல்வி அறிவைக் கொண்டு தெய்விக வழிபாடுகளில் ஈடுபாட்டுடன் இருப்பார்கள்.அப்படியே ஒருவேளை கிரக பலத்தால் நன்றாகப் படித்து இருந்தாலும் பல சமயங்களில் மேதைகள் ஆவது கடினம்.இது சனி பகவானின் வீடு என்பதால்,இவர்களுக்கு ஆயுள் பலம் 80 வயது வரை எனலாம் (சுப கிரக பார்வை இருப்பின்).மற்றவர்களிடம் காணும் சிறு குறைகளைக் கூட அடிக்கடி சுட்டிக் காட்டுபவர்களாக இருப்பார்கள்.என்றாலும் பெண்களின் நட்பை வெகு எளிதில் பெற்று விடுவார்கள்.
2016 ஆம் ஆண்டிற்கான கும்ப ராசியின் பலாபலன்கள்
அன்பார்ந்த கும்ப ராசி அன்பர்களே இந்த ஆண்டைப் பொருத்தவரையில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் (ஆண்டு முழுவதுமே) சஞ்சாரம் செய்கிறார். இது அவருக்கு சிறப்பான இடம் இல்லை தான். தொழிலில் சிறு, சிறு பின்னடைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். உடல் உபாதைகள் அதிகம் இருக்கும். அதனால் மருத்துவச் செலவுகள் கூட தொடரும். வீடு, நிலம் வாங்குவது தொடர்பாக கையிருப்புக் கரையும். எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற கெட்ட பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனால் கவலை வேண்டாம். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். கெட்டவன், கெடுவது நல்லது. அதன் படி உங்கள் ராசிக்கு கெடு பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு மிக சாதகமான நல்ல பலன்களைத் தரும். அதன்படி மேற்சொன்ன கெடு பலன்கள் கண்டிப்பாக உங்களுக்கு இந்தக் கால கட்டத்தில் மட்டும் சற்றே குறையும்.
மற்றபடி ராகு/ கேது பெயர்ச்சியை ஆராயும் பொழுது. 8.1.2016 ஆம் ஆண்டு ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்துக்குச் செல்கிறார். இது அவருக்கு சிறப்பான இடம் அல்ல தான். இதன் விளைவாக தரம் தாழ்ந்த பெண்களின் சேர்க்கை ஏற்படும். அதனால் அவப் பெயர் உருவாகும். கூட்டாளிகள் கூட வேண்டிய சமயத்தில் கைவிட்டு விடுவார்கள். அதனால் உடன் இருப்பவர்களை நம்ப வேண்டாம்.
அதுபோல இது வரையில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்த கேது இப்போது ராசியிலேயே வந்து விடுவதால். உடல் உபாதைகள் அதிகம் இருக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். காரியத் தடைகள் கூட உருவாகும்.
மற்றபடி குரு பகவானின் சஞ்சார நிலையை ஆராயும் பொழுது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடமான அஷ்டமத்தில் இந்த ஆண்டின் பெரும் பகுதி இருக்கிறார். இதனால் மன வேதனையும், நிலை அற்ற தன்மையும் கூடும். குடும்பத்தில் வரவை விட செலவு அதிகம் இருக்கும். நீங்கள் இது வரையில் சந்திக்காத பொருளாதார நெருக்கடியை இந்த ஆண்டு ஏற்படுத்துவார். இதனால் என்ன செய்வது என்று தவிப்பீர்கள். எனினும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 12,2,4 ஆம் இடங்களில் விழுவதால் சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. அதனாலும் கையிருப்புகள் குறையும். எனினும் குரு பகவான் 7.2.2016 அன்று வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். அவர் 20.6.2016 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் சிம்ம ராசிக்கு உள்ளேயே இருக்கிறார். அதன் பிறகு 1.8.2016 அன்று மீண்டும் கன்னி ராசிக்கு மாறுகிறார். இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அவரால் கெடு பலன்கள் குறையும். அது போல கும்ப ராசிக் காரர்கள் வருடத்தின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். அதாவது ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு.
உத்தியோகஸ்தர்களுக்கு
இந்த ஆண்டைப் பொருத்தவரையில் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் கூட அதிக வெறுப்பு வரலாம். மேல் அதிகாரிகளுடன் அனுசரித்துப் போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் உத்தியோக மாற்றம் கூட ஏற்பட இடமுண்டு. மொத்தத்தில் இந்த ஆண்டு உத்தியோக ரீதியாக அதிக மனக் கவலைகளை தரும் ஆண்டாக உள்ளது.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு லாபம் சீராக இருக்கும். ஆனால் அதிக போட்டி பொறாமைகளை சந்திக்கும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். புது முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவதில் அதிக சிக்கல்களைத் தரும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். பணப் புழக்கம் ஓரளவு தான் இருக்கும். அங்கீகாரம், விருதுகள் போன்றவற்றைக் கூட இந்த ஆண்டு எதிர்பார்ப்பது கடினம் தான்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டிய ஆண்டாக இந்த ஆண்டு அமையப் போகிறது. எனினும் முயற்சிக்கு ஏற்றபடி வளர்ச்சி இருக்கும். சிலருக்கு இந்த ஆண்டு வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகம் கூட அமையலாம். எனினும் விரும்பிய பாடம் கல்லூரியில் கிடைக்க அதிகம் போராட வேண்டிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.
விவசாயிகளுக்கு
விவாசயிகளுக்கு எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதம் ஆனாலும் கண்டிப்பாக கிடைக்கும். எனினும் வழக்குகளில் சிக்க நேரிடும். பிறருக்கு ஜாமீன் போடுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பெண்களுக்கு
பெண்களைப் பொருத்தவரையில் இந்த ஆண்டு கையிருப்பு அதிகமாகக் கரையும் ஆண்டு. பணத் தட்டுப்பாடு குடும்பத்தில் அதிகம் இருக்கும். குடும்ப ஒற்றுமைக்காக அதிகம் பாடு பட வேண்டிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். உடல் நிலை சீராக இருக்க வாய்ப்பில்லை. மருத்துவ செலவுகள் கூட அதிகரிக்கும்.
பரிகாரம்
பாம்புப் புற்று உள்ள கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் சனிஸ்வரர் சந்நிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வரவும். முடிந்தால் சனிக்கிழமைகளில் ஊனம் உற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை தானம் அளிக்கவும்.
பொது
பெயரின் முதல் எழுத்துக்கள் Goo, Ge, Go, Saa, See, Soo, Se, So, Da
அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் கருநீலம்
ராசியான எண்கள் அல்லது தேதிகள் 6,15,24
வணங்க வேண்டிய தெய்வம் மகாலட்சுமி (தாயார் )
ராசியான நிறம் நல்ல வெள்ளை
ராசியான திக்கு தென்கிழக்கு
ஆகாத நிறம் மஞ்சள்
பின் குறிப்பு
இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்
Discussion about this post