இந்த தனுஷ் ராசி குரு பகவானின் ஆட்சி வீடு என்பதால்,இவர்கள் சிறு வயதில் இருந்தே கல்வி,ஞானம் மற்றும் நல்ல சகவாசங்களைப் பெற்று இருப்பார்கள்.அதிகமாக ஊர் சுற்றும் பழக்கம் இவர்களுக்கு இருக்கும்.நல்லவர்கள்,கெட்டவர் களை எளிதில் அடையாளம் கண்டு கொண்டாலும் தங்களது நல்ல பண்புகாளால் தெரிந்தே அவர்களிடம் ஏமாறுவார்கள்.பிறருடைய குற்றம் குறைகளை எளிதில் கண்டு கொள்வார்கள்.பொதுவாக, தனுஷ் ராசியில் பிறந்தவர்களுக்கு தங்களது முற்பகுதியைக் காட்டிலும்,பிற் பகுதியிலேயே நன்றாக சொத்துக்களைப் பெற்று சுகமாக இருப்பார்கள்.அதாவது இவர்களுக்கு முற்கால வாழ்க்கை அவ்வளவு சொல்லும் படி இருக்காது.ஆனால் பிற்கால வாழ்க்கையில் சௌபாக்யங்களுடன் ஆனந்தமாக வாழ்வார்கள்.நல்ல கிரஹ பலம் பெற்ற தனுஷ் ராசிக் காரர்களின் ஆயுள் 77 வயது வரை எனலாம்.
2016 ஆம் ஆண்டிற்கான தனுஷ் ராசியின் பலாபலன்கள்
அன்பார்ந்த தனுஷ் ராசி அன்பர்களே. இந்த ஆண்டைப் பொருத்தவரையில் சனிபகவான் உங்கள் ராசிக்குப் பன்னிரெண்டாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்குப் பல வகையிலும் விரயச் செலவுகள் தான் ஏற்படும். இது ஏழரைச் சனியின் முதல் பகுதி என்பதால் சற்று கடுமையாகவே இந்த ஆண்டு இருக்கும். எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற கெட்ட பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனால் கவலை வேண்டாம். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். கெட்டவன், கெடுவது நல்லது. அதன் படி உங்கள் ராசிக்கு கெடு பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு மிக சாதகமான நல்ல பலன்களைத் தரும்.
மற்றபடி 8.1.2016 ஆம் ஆண்டு நடக்கும் ராகு/ கேது பெயர்ச்சியைப் பார்க்கும் போது கேது 3 ஆம் இடத்துக்கு இந்த ஆண்டு வருகிறார். 3 ஆம் வீடு கேதுவுக்கு உகந்த வீடு. இது உங்களுக்கு எண்ணற்ற நல்ல பலன்களைத் தான் செய்யும். ஆனால் அதே சமயத்தில் ராகு உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்துக்கு வருவதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் தரும். சிலர் வீட்டை விட்டு வெளியூரில் வேலை பார்க்கும் நிலை உருவாகும். புதிய காரியத்தை தொடுங்குவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு அதன் பிறகே அது நிறைவேறும்.
அது போல உங்கள் ராசிக்கு குரு பகவானின் நிலையை ஆராயும் போது. இந்த ஆண்டில் மட்டும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்திலும், 9 ஆம் இடத்திலும் மாறி, மாறி சஞ்சரிக்க உள்ளார்கள். அதிலும் 10 ஆம் இடத்தில் இந்த ஆண்டு குருபகவான் அதிக காலங்கள் இருப்பார் என்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக விரும்பாத இட மாற்றத்தை சந்திப்பார்கள். எனினும் குரு பகவானின் பார்வை இந்த ஆண்டு பல வகைகளில் உங்களுக்கு நன்மையைச் செய்யும். குறிப்பாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 2,4,6 ஆம் இடங்களைப் பார்ப்பதால் செய்யும் தொழிலில் எதிரிகள் அதிகம் இருந்தாலுமே கூட உங்களுக்கு வெற்றி உண்டு. வீடு, நிலம் வாங்கும் யோகம் சிலருக்கு அமையும் அதனால் கை இருப்புகள் கரையும். அதிலும் குறிப்பாக குரு பகவான் 7.2.2016 அன்று வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். அவர் 20.6.2016 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் சிம்ம ராசிக்கு உள்ளேயே இருக்கிறார். அதன் பிறகு 1.8.2016 அன்று கன்னி ராசிக்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். ஆக தனுசு ராசிக்கு இந்த ஆண்டில் முற்பகுதி வெற்றி மிகுந்தும் பிற்பகுதி சோதனை கலந்த சாதனையாகவும் இருக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆண்டின் முற்பகுதியில் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் தேவை அற்ற இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். மேல் அதிகாரிகளை அனுசரித்துப் போகும் ஆண்டு. நீங்கள் செய்யும் சிறு குறைகளைக் கூட ஆண்டின் பிற்பகுதியில் உங்கள் மேலதிகாரிகள் பெரிய விஷயமாக பேசுவார்கள். சற்று நெளிவு, சுளிவை அறிந்து வேலை பார்க்க வேண்டிய ஆண்டு இது. உங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புக்களை யாரிடமும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். எனினும் மார்ச் முதல் ஜூன் வரை நிலைமையை சரி கட்டி விடலாம். அதன் பிறகு தான் கவனமுடன் இருக்க வேண்டும்.
வியாபாரிகள்
வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக அலைச்சல் மிக்க ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். இருப்பதை கொண்டு சிறப்பாக நடத்த முயற்சி செய்யுங்கள். வரவு, செலவு கணக்கை மட்டும் கவனமாகப் பராமரிக்கவும். ஏனெனில் ராஜாங்க விஷயமாய் கெடுபிடிகள் வரக்கூடும் கவனம்.
கலைஞர்களுக்கு
கலைத் துறையினரை பொருத்தவரையில் கடின முயற்சி எடுத்தால் தக்க பலன் கிடைக்கும் ஆண்டு இது. எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காமல் போகாது. கேதுவால் வழக்கு, விவகாரங்கள் சாதகம் ஆகும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் சீரான பலன்களைக் காண்பார்கள். அதிக முயற்சி எடுத்துப் படிக்க வேண்டி இருக்கும். படிப்பில் ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளவும். காரணம் அதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆசிரியர்கள் உங்களைக் குறை கூறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக சவால்களை சந்திக்கும் ஆண்டு தான்.
விவசாயிகளுக்கு
விவசாயத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல லாபங்களைப் பெரும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும்.
பெண்களுக்கு
பெண்களைப் பொருத்தவரையில் இந்த ஆண்டு குடும்பத்தில் அதிகமாக விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய ஆண்டாக இருக்கும். மற்றபடி உடல் நிலை சீராகும் அதனால் மருத்துவச் செலவுகளை சமாளித்து விடுவீர்கள்.
பரிகாரம்
அவசியம் திருச்செந்தூருக்கு சென்று வாருங்கள். எந்த தெய்வத்தை வழி பட்டாலும் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டு வழிபாடு செய்யுங்கள். ராகு காலத்தில் துர்கையை வழிபட்டு வரவும்.
பொது
பெயரின் முதல் எழுத்துக்கள் Ye, Yo, Bhaa, Bhee, Bhoo, Dhaa, Phaa, Taa, Bhe
அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் கனகபுஷ்பராகம்
ராசியான எண்கள் அல்லது தேதிகள் 1,10,19
வணங்க வேண்டிய தெய்வம் யாரேனும் மகான்களை வழிபடுவது நல்லது, அல்லது தக்ஷிணாமூர்த்தியை வழிபடலாம்
ராசியான நிறம் சிவப்பு
ராசியான திக்கு கிழக்கு, வடகிழக்கு
ஆகாத நிறம் கருப்பு, வெள்ளை
பின் குறிப்பு
இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.
Discussion about this post