இந்த விருட்சிக ராசி செவ்வாயின் ஆட்சி வீடு என்பதால்,இவர்கள் எப்பொழுதும் சுறு சுறுப்புடனும்,கொஞ்சம் பிடிவாத குணத்துடனும் இருப்பார்கள்.இந்த விருச்சிக ராசியில் மனோகாரகனான சந்திரன் நீசம் பெறுவதால்,இவர்கள் அதிகமாக உணர்ச்சி வசப் படுவார்கள் . அதிக ரத்த அழுத்த நோய்களுக்கு ஆளாகலாம்.பரந்த நோக்கங்களை கொண்ட பேச்சுக்களுடன்,பெரிய காரியங்களைத் தேவைப்பட்டால் தந்திரமாகவும் முடித்துக் காட்டுபவர்கள்.இவர்கள் அதிக போர் குணம் கொண்டவர்கள் என்பதால்,வாழ்வில் அதிக போராட்டங்கள் இருக்கும்.ஆனால் அப் போராட்டங்களைத் தங்களது திறமையினால் சமாளித்து வெற்றி பெறுவார்கள்.பொதுவாக இவர்களது ஆயுள் பலம் 65 வயது வரை எனலாம்.பெரும்பாலும் இருதய நோய்கள்,மற்றும் ரத்த சம்மந்தமான நோய்களால் இவர்களது கடைசி காலம் முடியலாம்.எனவே கோபத்தை இவர்கள் குறைத்துக் கொள்வது நல்லது.
2016 ஆம் ஆண்டிற்கான விருச்சிக ராசியின் பலாபலன்கள்
அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களே இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் உடல் நிலையில் அதிகம் கவனம் செலுத்தி வரவும். மேலும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 3,7,10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் இளைய உடன் பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகம் இருக்கும். அது போல கணவன் மனைவி இடையே அடிக்கடி சச்சரவுகள் அதிகம் வந்து போகும். கூட்டுத் தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள். கவனம். அது போல கூட்டுத் தொழில் கூட லாபம் தராது. நீங்கள் நண்பர்கள், எதிரிகளை அடையாளம் காணும் வருடம் இது. எனினும், சனிபகவான் இந்த ஆண்டு முழுவதுமே இது போன்ற கெட்ட பலன்களை உங்களுக்குக் கொடுக்க மாட்டார். அதனால் கவலை வேண்டாம். அதற்குக் காரணம் 28.3.2016 முதல் 14.7.2016 வரை சனி பகவான் வக்கிரம் அடைகிறார். கெட்டவன், கெடுவது நல்லது. அதன் படி உங்கள் ராசிக்கு கெடு பலன்களை செய்யும் சனி பகவான் மேற்கண்ட இக்காலத்தில் கெடுவது (வக்கிரம் அடைவது) உங்களுக்கு மிக சாதகமான நல்ல பலன்களைத் தரும்.
அடுத்து 8.1.2016 ஆம் நாள் ராகு/ கேதுக்கள் பெயர்ச்சி ஆகிறார்கள். இதன்படிப் பார்த்தால் இதுவரையில் உங்களது ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருந்து சுப பலன்களை ஓரளவு செய்து கொண்டு வந்த ராகு. இப்போது 10 ஆம் இடத்திற்குச் செல்கிறார். 10 ஆம் இடம் ராகு பகவானுக்கு ஏற்ற இடம் இல்லை. இதனால் பொருள் இழப்புக்களும், உடல் உபாதைகளும் அதிகம் வரும். ராகு காலத்தில் அவசியம் துர்கையை வழிபாடு செய்து வாருங்கள். அப்படிச் செய்தால் நல்ல பலன்கள் உண்டு. அது போல கேது பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடமான கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் நேரத்திற்கு உணவு உண்ண முடியாமல், தூங்க முடியாமல் மனதில் கவலைகள் பெருகலாம். சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் கூட வந்து போகும்.
அடுத்து குரு பகவானின் நிலையை ஆராயும் பொழுது. இந்த ஆண்டு முழுவதுமே பெரும்பாலும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இடையில் அவர் சிம்ம ராசிக்கு சென்றாலுமே கூட, ஆண்டு இறுதியில் அவர் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான கன்னி ராசிக்கு வந்து விடுகிறார். இதன்படிப் பார்த்தால் சனி மற்றும் ராகு/கேதுவால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறையும். எனினும் குரு பகவான் 7.2.2016 அன்று வக்கிரம் அடைந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். அவர் 20.6.2016 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் சிம்ம ராசிக்கு உள்ளேயே இருக்கிறார். அதன் பிறகு 1.8.2016 அன்று கன்னி ராசிக்கு மாறுகிறார். இந்தக் காலத்தில் மட்டும் குரு பகவானால் அவ்வளவு சிறப்பாக செயல் பட இயலாது. எனினும் குரு பகவானின் பார்வைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. அதன் காரணமாக சிலருக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். திருமணம் ஆன சிலருக்கு குழந்தை பாக்கியம் ஆண்டு இறுதியில் கிடைக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் விதமாக வரவுகள் இந்த ஆண்டு பையை நிறைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
உத்தியோகத்தில் வேலை பளு அதிகம் இருந்தாலும் வளர்ச்சியும் உண்டு. பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகிய அனைத்தையும் இந்த 2016 ஆம் ஆண்டு எதிர்பார்க்கலாம். வேலையை இழந்தவர்களுக்குக் கூட இந்த ஆண்டு நல்ல வேலை கிடைக்கும். எனினும் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படவும்.
வியாபாரிகள்
வியாபாரிகள் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். 2016 மார்ச்சுக்குப் பிறகு சனி வக்கிரம் அடைவதால் இன்னும் பல நல்ல பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். புகழ், பாராட்டு தேடி வரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இதுவரையில் இருந்து வந்த தடை நீங்கும்.
மாணவர்களுக்கு
மாணவர்களுக்கு இந்த ஆண்டைப் பொருத்தவரையில் போட்டி போட்டு வெற்றி பெறும் ஆண்டாக இருக்கும். எண்ணம் நிறைவேறும். சிலருக்கு விரும்பிய பாடம் கூட கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் கூட இந்த ராசியில் பிறந்த சிலருக்கு இந்த ஆண்டு உண்டு.
விவசாயிகளுக்கு
விவசாயிகள் முன்னேற்றமான பலன்களை இந்த ஆண்டு காண்பார்கள். கடந்த ஆண்டில் இருந்த தேக்க நிலை இந்த ஆண்டு மாறும். அரசு ஆதரவு மற்றும் உதவிகள் இந்த ஆண்டு உண்டு. நல்ல மகசூலை கொடுக்கும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.
பெண்களுக்கு
பெண்கள் சிலருக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் உண்டு. எனினும் கேதுவால் இந்த வருடம் உடல் உபாதைகள் சில தவிர்க்க முடியாதது தான். பேச்சில் கவனம் தேவை. தீய சகவாசம் தேடி வரும். கவனம்.
பரிகாரம்
தெய்வங்களை ஆராதிக்கும் போது கண்டிப்பாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கோயிலுக்கு செல்லும் போது கூட நல்லெண்ணையை உடன் எடுத்துச் சென்று தீபத்துக்கு ஊற்றுங்கள்.
பொது
பெயரின் முதல் எழுத்துக்கள் To, Naa, Nee, Noo, Ne, No, Yaa, Yee, Yu
அவசியம் அணிய வேண்டிய ரத்தினக் கல் பவளம்
ராசியான எண்கள் அல்லது தேதிகள் 3,12,11,2,20,29
வணங்க வேண்டிய தெய்வம் முருகப் பெருமான்
ராசியான நிறம் மஞ்சள்
ராசியான திக்கு கிழக்கு, வடமேற்கு
ஆகாத நிறம் பச்சை
பின் குறிப்பு
இந்த இடத்தில் கொடுக்கப் பட்டுள்ள பலன்கள் யாவும் நன்றாகப் பார்த்துக் கணிக்கப்பட்டது. ஆனால் சிலருக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் தசாபுத்தி, திசை மோசமாக இருந்தால் மேற்கண்ட நல்ல பலன்கள் (கூடவோ, குறையவோ) ஓரளவு பாதிக்க இடம் முண்டு.மேற்சொன்னவை யாவும் ஒரு,ஒரு ராசியினருக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுப் பலன்களே. தசாபுத்திப் பலன்களையும் ஆராயும் பொழுது உண்மையான பலன்கள், விவரங்கள் கிடைக்கும்.
Discussion about this post