ரத்னாகரன் யார் ?

0
         ஸ்ரீ ராமனின் கதையை முதன் முதலில்
வழங்கிய வால்மீகி ஆதி கவி என்றும், ரிஷி என்றும் அழைக்கப்படுகின்றார். கவி என்ற
சொல்லுக்கு புரட்சிகரமான பார்வை உடையவர் என்று பொருள். ரிஷி என்பதற்கு
சத்தியத்தைக் கண்டவர் எனறு அர்த்தம்.
      வால்மீகி என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட
அம்முனிவர் பிறவியால் ஞானியும் அல்லர், உயர்ந்த குலத்தை சேர்ந்தவரும் அல்லர்.
        அவர் ரத்னாகரன் என்று பெயர் கொண்ட ஒரு
வழிப்பறிக் கொள்ளைக்காரனாக இருந்தார். பிரம்மாவின் வரத்தில் பறிந்த நாரதர் என்ற
தேவ ரிஷியையே வழிப்பறி செய்ய ஒருநாள் ரத்னாகரன் துணிந்தான்.
        அப்போது நாரதர், “அப்பனே, பிறரை
துன்புறுத்திக் கொள்ளையடிக்கும் மாபாதகத்தை செய்கிறாயே ஏன்?” என்று கேட்டார்.
ரத்னாகரன், “என் மனைவி, மக்களைக் காப்பாற்றவே, இது இழிவானது என்று அறிந்தும் அதை
நான் செய்ய வேண்டி இருக்கிறது” என்று கூறினான்.         
       “அப்படியானால் இந்த பாதகத்திலிருந்து
கிடைக்கும் செல்வத்தைப் பகிர்ந்து அனுபவிக்கும் உன்னுடைய மனைவி, மக்கள் உன்னுடைய
பாவத்திலும், பாதகத்திலும் பங்கு கொள்வார்களா?” என்று கேட்டார் நாரதர்.
           ரத்னாகரன் நாரதரை அதே இடத்தில் ஒரு
மரத்தில் காட்டுக் கொடியால் கட்டிப்போட்டு விட்டு தன் வீட்டுக்குச் சென்றான். தன்
மனைவி மக்களைப் பார்த்து, “உங்களுக்காக நான் கொண்டு வந்த செல்வங்களைப் பங்கு
போட்டு கொணடர்களே, அச்செல்வத்தை சம்பாதப்பதற்கக நான் புரிந்த பாவத்திலும்,
பாதகத்திலும் பங்கு கொள்வீர்களா?” என்று கேட்டான்.
           அதற்கு அவர்கள், “நீங்கள் கொண்டு
வரும் செல்வமே எங்களுக்குரியது. அதை நீங்கள் எந்த வழியில் சம்பாதித்தீர்கள் என்பது
உங்களைப் பொறுத்த விஷயம்” என்று கூறினார்கள். அதிர்ச்சி அடைந்த ரத்னாகரனும்
நல்லறிவுப் பெற்று, திரும்ப ஓடி வந்து நாரதரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான். தன்
குற்றங்களுக்கு கழுவாய் தேட விரும்பினான்.
            அவன் மீது இரக்கம் கொண்ட நாரதர்,
அவனுக்கு “ராம” என்னும் மந்திரத்தை உபதேசித்து அதனையே ஜெபம் செய்து வருமாறு
கூறினார். ஆனால் அறிவில்லாத பாமரனாகிய ரத்னாகரனுக்கோ “ராம” என்ற மந்திரத்தை
உச்சரிக்க கூட வாயில் வரவில்லை, அவன் வாயால் “மரா” என்று சொல்லவே முடிந்தது.
நம்பிக்கையுடன் தன்னால் முடிந்தவரை அற்த மந்திரத்தை ஜெபம் செய்யும் படி தேவ ரிஷி
கூறிவிட்டு அகன்றார். அந்த திருடன் “மரா, மரா” என்று ஜெபித்து நாளடைவில் “ராம,
ராம” என்று ஆகிவிட்டது.
         அந்த ஒலியோடு அசன் ஒன்றிப் போனான்.
தன்னை மறந்தான், மனத்தை உள்நோக்கி செலுத்தி தியானம் செய்தான். மிகுந்த ஈடுபாடும்,
நம்பிக்கையும், தான் கடைத்தேற வேண்டுமென்ற வேட்கையும் கொண்டு அவன் அந்த நாமத்தை
ஜெபித்து வந்தான்.
          நாளடைவில் அவனுக்கு புறஉலக உணர்வே
இல்லாமல் போயிற்று. அவனைச் சுற்றி புற்று ஒன்று வளர்ந்து அவனை முடிவிடட்டது.
புற்றிலிருந்து பரிபக்குவம் அடைந்நதனால் அவனுக்கு வால்மீக என்ற பெயர் உண்டாயிற்று.
        ராம மந்திரத்தின் துல வடிவமே ஸ்ரீராமன்.
ராமனின் ஒலி வடிவமான நாமத்தை ஜெபித்து அகண்ட சச்சிதானந்த வடிவினனாகிய ஸ்ரீராமனை
தனது உள்ளத்து உறையும், ஆத்ம ராமனாக வால்மீகி கண்டு கொண்டார். திரும்பவும்
நாரதரைக் கேட்டு ஸ்ரீராமனின் மண்ணுலக வரலாற்றையெல்லாம் அறிந்து கொண்டார். புதிய
சொற்களால் ராமாயணம் என்ற ஆதி காவியத்தையும் நமக்காக வடித்துத்தந்தார். ராம
நாமத்தின் பெருமைக்கும் முதல்சான்று வால்மீகியே. வால்மீயின் கதை திரேதாயுதத்தில்
நடந்தது ஆகும்.        
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here