திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தர்ம தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருப்போரில் சிலர், வி.ஐ.பி., ஒருவர் அதிகாரிகள் புடைசூழ மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டு, வெங்கடாஜலபதி முன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்யும் காட்சியைப் பார்த்தால், மனதுக்குள் புழுங்கி, ‘ஏழுமலையானே… எங்களையும் இந்த நிலைக்கு உயர்த்த மாட்டாயா…’ என்று ஏக்கம் கொள்வர்.
ஆனால், ஏழுமலையான் மேல் உண்மையான பக்தி இருந்தால், அந்த ஏக்கம் தேவையில்லை; அவனே தேடி வந்து அருள்வான் என்பதை விளக்கும் கதை இது.
பீமன் எனும் மண்பாண்டத் தொழிலாளி ஒருவர், புரட்டாசி சனி என்றில்லாமல், எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளை நினைத்து, விரதம் இருந்து வந்தார். அவர் ஒரு ஏழைத் தொழிலாளி என்பதால், நாள் முழுக்க வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால், அவரால், திருப்பதிக்கு போக முடியவில்லை. அதனால், வெங்கடா ஜலபதியின் சிலையை மண்ணிலேயே வடித்து, தன் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தார். தினமும், மண்பாண்டங்கள் செய்து முடித்ததும், கையில் ஒட்டியிருக்கும் மண்ணை வழித்து, சிறு சிறு பூப்போல செய்து, அதை அந்த சிலைக்கு தூவுவார்.
இந்த சமயத்தில், மன்னன் தொண்டைமான், ஏழுமலையானுக்கு தங்கப்பூக்களை காணிக்கையாக வழங்கி, தினமும், அந்தப் பூக்களால் தான் பெருமாளை அர்ச்சனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டான். அதே போன்று, அர்ச்சகர்களும் தங்கப் பூக்களால் அர்ச்சனையை செய்தனர். ஆனால், மறுநாள் வேங்கடவனின் பாதத்தில் கிடந்ததோ மண்ணால் செய்யப்பட்ட பூக்கள். இது தினமும் தொடர்ந்ததால், இந்த விஷயத்தை அர்ச்சகர்கள், மன்னரிடம் தெரியப்படுத்தினர். இதைக் கேட்டதும் மன்னன் ஆச்சரியப்பட்டாலும், மனதில் குழப்பம் அடைந்தான்.
மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், ‘மன்னா… மனம் குழம்பாதே… என் பக்தன் பீமன் என்பவன் மண் பூக்களால் என்னை பக்தியுடன் அர்ச்சிக்கும் பூக்களை நான் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தான் அப்பூக்கள் அங்கே தென்படுகின்றன…’ என்றார்.
தன் எளிமையான பக்தியின் மூலம் கடவுளின் அருளைப் பெற்ற பீமனைத் தேடிச் சென்ற மன்னன், அவரிடம் நடந்ததைக் கூறினார். அவரோ, ‘அரசே… காலை முதல் மாலை வரை இந்த வண்டிச்சக்கரம் சுழன்றால் தான், என் வாழ்க்கைச் சக்கரம் சுழலும்; இதில், எனக்கு கோவிலுக்குப் போக நேரமேது! அதனால், மண்ணில் செய்த இந்த மண் பூக்களால், வேங்கடவனுக்கு அர்ச்சனை செய்வேன். சனிக்கிழமை விரதத்தை தவறாமல் அனுஷ்டிப்பேன். ஆனால், இதற்காக, என் பூக்கள் பெருமாளின் காலடியில் வந்து விழுகிறது என்றால், அவனது கருணையை என்னவென்பேன்…’ என்று நெகிழ்ந்தார்.
பீமனின் வார்த்தையைக் கேட்ட மன்னன், அன்றிலிருந்து, திருப்பதி கோவிலில், சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ததுடன், புரட்டாசி பிரம்மோற்சவமும் நடத்த ஆணையிட்டான். அன்று முதல், இன்று வரை திருப்பதி திருமலையில் இந்த விழாக்கள் முக்கியமானவையாக உள்ளன.
திருப்பதி செல்பவர்கள், கை நிறைய காசு கொண்டு செல்ல வேண்டுமென்பதில்லை. உள்ளம் நிறைய பக்தியை சுமந்து சென்றால் போதும்; வேங்கடவனின் அருளைப் பெறலாம்
திருப்பதி வெங்கடாசலபதி, பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைப்பவர். அதோடு, பிறப்பு – இறப்பு வட்டத்திலிருந்து மனிதனை விடுவித்து, அவனுக்கு முக்தி அளிக்கக்கூடிய சக்தி படைத்த ஒரே கடவுள் அவர். புராணங்கள், சாத்திரங்கள், தல புராணங்கள், மற்றும் அவதார மகிமையை எடுத்துரைக்கும் பக்திப் பாடல்கள் ஆகியவை இதற்குச் சாட்சியாக விளங்கு கின்றன. திருப்பதி வேங்கடா சலபதியின் கோவிலின் செல்வச் செழிப்பையும் அதன் பிரபலத்தையும் எடுத்துக்காட்டும் ஒரு சில புள்ளிவிபரங்கள். இதோ உங்கள் பார்வைக்காக .
* 32,000 ஹெக்டேரில் பரவிக் கிடக்கும் மரங்கள் மற்றும் மலைக்காடுகள். இவற்றில் ஏராளமான சந்தன மரங்களும் உள்ளன. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோவிலும் இதுதான். ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோவிலில் உபயோகிக்கப்படுகின்றன.
Discussion about this post