மனித வாழ்வில் பிரச்சனைகள், நாம் செய்த முன்வினை காரணமாக உருவாகிக்கொண்டே இருக்கிறது. அதிலிருந்து விடுபட்டு நற்பயன்களை அடைய இறைவழிபாடு மிகவும் அவசியமாகும். இறைவழிபாடு செய்ய பல சுப நாட்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நாட்களைப் புண்ணியகாலங்கள் என்று அழைப்பார்கள். புண்ணியகாலங்கள் மொத்தம் மூன்று வகைப்படும். அவை
விஷூ புண்ணியகாலம்
ஷடசீதி புண்ணியகாலம்
விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது.
சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷூப் புண்ணியகாலம். இந்த நாட்களில் பிரம்மாவை வழிபட உகந்த நாளாகும்.
ஆனி, புரட்டாசி, மார்கழி மற்றும் பங்குனி முதலிய மாதங்களின் முதல்நாள் ஷடசீதி புண்ணியகாலம். இந்த நாட்கள் சிவனை வழிபட உகந்தவையாகும்.
வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்கள் பெருமாளை வழிபட உகந்த நாட்களாகும்.
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவர் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறைகளும் மற்ற அனைத்திலும் சிறந்த பலன் தருகிறது. ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனை தரவல்லது விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆகும். மஹாவிஷ்ணுவின் அருளும், கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் விளங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
இன்று பல குடும்பங்களில் பிரச்சனைகள் அதிகரித்து அமைதியில்லாத சூழலே நிலவுகிறது. குறிப்பாக கணவன், மனைவிக்கிடையே பிரச்சனைகள் தோன்றி சந்தோஷமாக இருக்க வேண்டிய இல்வாழ்க்கை வெறுப்பாக மாறத் தொடங்கி விடுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கோபம், ஈகோ முதலியவற்றின் காரணமாகத் தோன்றும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கும் அருமருந்தாக இந்த விஷ்ணுபதி புண்ணியகாலம் திகழ்கிறது.
விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோவில்களுக்கு சென்று மனமுருகி வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும். குறிப்பாக சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் கோவில்களுக்கு சென்று பெருமாளை வழிபட வேண்டும். இந்த புண்ணியகாலத்தில் பெருமாள் சந்நிதியை 27 முறை பிரதட்சிணம் செய்வது மிகவும் விசேஷம்.
கும்ப சங்கராந்தி என்று போற்றப்படும் இந்நாளில் ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் சென்று நீராடி வழிபட வேண்டும். இதனால் சகல பாவங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. நாளை வைகாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தின் முதல் நாளில் விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பகவான் விஷ்ணுவை வழிபட்டு பல நன்மைகளை அடைவோம்.
இந்த புண்ணியகாலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலட்சுமியையும், ஸ்ரீவிஷ்ணு மற்றும் ஸ்ரீதேவியினுடைய துதிகளை கூறி சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவின்றி செய்யலாம். தற்போது கோவிலுக்கு செல்ல முடியாத சூழலாக இருப்பதால் வீட்டிலேயே நாராயணனை மனதார நினைத்து வழிபடலாம்.
Discussion about this post