ஆண்டவனையே ஆண்ட ஆண்டாளின் திருப்பாவை….வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு திருப்பாவை பாடல்கள். மார்கழி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது திருப்பாவையும் ஆண்டாளும்.
மொத்தம் 30 பாடல்களை கொண்ட திருப்பாவை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி (Margazhi) மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில் மன்னருக்கு முடிசூட்டும்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.
அன்பினால் அழைக்கிறோம் சீறியருளாதே என்று கொஞ்சும் நாச்சியார் கோதை, கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் என்று அனைவரையும் அழைக்கிறார். கோதை நாச்சியார், ரங்க மன்னாரின் ஆண்டாளின் பாசுரங்களை (Thiruppavai) பாடித் துதிப்போம்.
பூஜைக்கான நல்ல நேரம்..
செவ்வாய்
நல்ல நேரம் 10.30-11.30 ;4.30-5.30.
எமகண்டம் காலை 9.00-10.30.
இராகு காலம் மாலை 3.00-4.30.
12.1.2021 செவ்வாய்க்கிழமை சார்வரி வருடம் மார்கழி மாதம் – 28ம் நாள்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பொது: தேய்பிறை சதுர்த்தசி திதி பகல் 12.23 மணி வரை; பிறகு அமாவாசை. மூல நட்சத்திரம் காலை 7.37 மணி வரை ; அதன் பிறகு பூராடம். யோகம்: அமிர்த யோகம். அனுமன் ஜெயந்தி
பரிகாரம்: பால்
திருப்பாவை 28-வது பாடல்:-
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
பொருள் மற்றும் விளக்கம்: குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் (Cow) பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது.
விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.
Discussion about this post