ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி விழா நடந்தது.திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், தனி சன்னதியில், குருபகவான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆண்டுதோறும், இக்கோவிலில், குருபெயர்ச்சியை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கும். நேற்று இரவு, 9:48 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு, குருபகவான் பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு, நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு, சிறப்பு யாகம், இரவு, 8:00க்கு, பஞ்சமூர்த்திகள் சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இரண்டாம் கால சிறப்பு மகா யாகம், காலை, 8:00க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை, 9:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, குருபகவானை தரிசித்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி, ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே, குருபெயர்ச்சி விழாவில், ஒரு மணிநேரத்திற்கு, 200 பேர் வீதம், 14ம் தேதி முதல், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆன்லைன் பதிவு பற்றி தெரியாத, வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்ததால், நேரடி கட்டண தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குருபெயர்ச்சி விழா ஹோமம், அபிஷேகம், குருபெயர்ச்சி மகா தீபாராதனை, ‘யு – டியூப்’ மூலம், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. குருபகவான், இரவு, 9:48 மணிக்கு பெயர்ச்சி அடைந்தவுடன் தீபாராதனை நடந்தது.
Discussion about this post