உலகில் வாழும் உயிர்கள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவான் மகாவிஷ்ணுவை எல்லா தினங்களும் விரதம் இருந்து வழிபடலாம். பெருமாளுக்குரிய தினங்களான புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, வீட்டில் பெருமாளுக்கு வாசமிக்க மலர்கள் சாற்றி ஏதேனும் இனிப்பு உணவுகளை நைவேத்தியம் வைத்து, பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிபடுவது கூடுதல் பலன்களை தரும்.
மகாவிஷ்ணுவை வாசுதேவன், நாராயணன், பத்மநாபன், ஸ்ரீனிவாசன், ஜகன்நாதர், விதோபர், ஹரி என்றும் பல்வேறு பெயர்களில் வழிபடுகின்றனர். இவர் நீல நிற மேனியும் கீழ் வலது கையில் கௌமேதகியும் கீழ் இடது கையில் பத்மாவும் மேல் வலது கையில் சுதர்சனமும் மேல் இடது கையில் பாஞ்சஜன்யமும் தாங்கிய தோற்றத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு ஆவார்.
புதன் கிழமைகளில் புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடுவது மிகுந்த நற்பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். மகாவிஷ்ணுவின் காயத்ரி மந்திரத்தை நாம் பாராயணம் செய்வதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும், வீட்டில் பண பற்றாக்குறை நீங்கி, வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். விஷ்ணு காயத்ரி மந்திரம்:
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
ஸ்ரீனிவாச பெருமாளே
எனக்கு சிறப்பான அறிவை தந்து என் உள்ளத்தில் உள்ள இருளை நீக்கி என் மனதை தெளிவு படுத்த உங்களை நான் மனதார வேண்டுகிறேன். இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 முறை பாராயணம் செய்வதன் பலனாக நம் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.
Discussion about this post