அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் அன்னாபிஷேகம் எளிமையான முறையில் நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று 100 மூட்டை பச்சரிசியால் கோயில் வளாகத்திலேயே சாதம் சமைத்து பதிமூன்றரை அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு அபிஷேக ஆராதனை நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டு ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று நடைபெற இருந்த 36-வது அன்னாபிஷேகத்துக்கு கொரோனா பரவல் காரணமாக அரசு தடைவிதித்திருந்த நிலையில், அன்னாபிஷேகத்துக்கு பதிலாக அன்னக்காப்பு (அன்னம் சாற்றி அலங்காரம்) நடைபெற்றது.
51 கிலோ பச்சரிசியால் சமைக்கப்பட்ட சாதம் சிவலிங்கத்தின் மீது சாற்றப்பட்டு மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, தஞ்சை பெரிய கோயிலில் 12 அடி உயர சிவலிங்கம், 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையார் கொண்ட ஒரே கல்லால் ஆன மூலவர் பெருவுடையாருக்கு 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கனிகள், இனிப்பு வகைகள், 250 கிலோ மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு நேற்று அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் கடம்பாடியில் உள்ள மனோன்மணி உடனுறை திருவதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் சிவன் கோயில்களில் ஐப்பசி மாதங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இதையொட்டி கடம்பாடியில் உள்ள திருவதீஸ்வரர் கோயில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. கடம்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் காஞ்சிபுரம் மற்றும்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளசிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சில கோயில்களில் நேற்று முன்தினம் இரவும், சில கோயில்களில் நேற்று இரவும்அன்னாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கு வந்து சிவனை வழிபட்டனர்.
Discussion about this post