ஒரு மாதத்தில் இரண்டு முறை வரும் முழு நிலவை நீல நிலவு என அழைக்கின்றனர். 30 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்நிகழ்வு இம்மாதம் 31-ம் தேதி நடக்கும்.
பூமியை சுற்றி வரும் நிலவு, மாதத்தில் ஒரு முறை மட்டுமே முழுவதுமாக வானில் காட்சி தரும். அதாவது ஆண்டுக்கு 12 முறையும், பருவத்திற்கு 3 முறையும் தோன்றும். இது அரிதாக மாதத்தில் இரண்டு முறை அல்லது பருவத்திற்கு 4 முறை தோன்றும். இதனை நீல நிலவு என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். ஆனால் நிலவு எப்போதும் போல வெளிர் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலேயே இருக்கும். எரிமலை வெடிப்பு, காட்டு தீ, தூசி புயல் போன்றவற்றின் போது மட்டும் அரிதாக நிலவு நீல நிறமாக காட்சி தரும்.
ஆங்கிலத்தில் அரிதாக நடக்கும் நிகழ்வை “ஒன்ஸ் இன் ஏ ப்ளூமூன்” என்பார்கள். மாதத்திற்கு இரண்டு முறை தோன்றும் நிலவுக்கும் இவ்வார்த்தையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த மாதத்தில் முதல் முழு நிலவு அக்., முதல் தேதியில் தோன்றியது. இந்த நிலையில் 31-ம் தேதியும் அரிதான இரண்டாவது முழு நிலவு தோன்றுகிறது. இரவு 8.19 மணிக்கு இந்நிலவு உதயமாகும். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இது போன்று ஏற்படும். கடைசியாக மார்ச் 2018-ல் நடந்தது என நாசா கூறியுள்ளது.
Discussion about this post