அமாவாசை வழிபாட்டையொட்டி நேற்று முதல் 17-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு அருள்மிகு சுந்தர மகாலிங்கம் சுவாமி திருக்கோயில் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
பௌர்ணமி மற்றும் அவாசாதை தினங்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதனால் பௌர்ணமி மற்றும் அமாவாசையை ஒட்டியுள்ள 4 நாள்கள் மட்டுமே பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமாவாசை தினத்தையொட்டி நேற்று முதல் 17ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நேற்றும் இன்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்றனர்.
சதுரகிரி மலையேறும் பக்தர்கள் மலையில் உள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தனம் மகாலிங்கம் சுவாமிகளை தரிசிக்கும் முன் வழியில் காட்டாற்றை ஒட்டியுள்ள கோரக்கர் குகைக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.
கோரக்கர் சித்தர் இங்கு சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதாக கூறப்படுவதால், சதுரகிரி மலையேறும் அனைத்து பக்தர்களும் கோரக்கர் குகைக்குச் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
ஆனால், மலைப்பாதையில் கோரக்கர் குகைக்குச் செல்ல பாதை வசதி இல்லாததால் பக்தர்கள் பாறைகள் மீது ஏறிச்சென்றும், வழுக்கும் காட்டாற்றைக் கடந்தும் கோரக்கர் குகைக்கு செல்ல வேண்டியுள்ளது.
ஆபத்தான முறையில் செல்ல வேண்டியுள்ளதால் மலைப் பாதையில் கோரக்கர் குகைக்குச் செல்ல வனத்துறை பாதை அமைத்துக்கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
Discussion about this post