வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு, மத்திய அரசு அனுமதி

0

 

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில், சீக்கியர்களின் பிரதான புனித தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற வழங்கப்பட்டிருந்த அனுமதி, கடந்த, 1984ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. சீக்கிய தீவிரவாதிகளை பிடிக்க மேற்கொள்ளப்பட்ட, ‘ஆபரேஷன் புளூஸ்டார்’ நடவடிக்கையை அடுத்து, இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது.
பஞ்சாபில் தீவிரவாதம் ஒழிந்து, அமைதி திரும்பியதை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை மீண்டும் வழங்க வேண்டும் என, பொற்கோவிலை நிர்வகிக்கும், சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, பொற்கோவிலுக்கு, மத்திய அரசு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
இது பற்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘டுவிட்டரில்’ வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்புக்கு, வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது, மிகப்பெரிய முடிவு. இதன் மூலம், நமது சீக்கிய சகோதர, சகோதரிகளின், மக்கள் நல சேவைகள், உலகம் முழுதும் பிரபலமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொற்கோவிலுக்கு வழங்கப்பட்ட அனுமதி போல், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் உள்ள கோவில்களும், வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற அனுமதி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் போன்றவை,வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற, முறைப்படி அனுமதி கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினால், அனுமதி கிடைக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் மூலம் நாடு முழுதும் உள்ள பழமையான கோவில்கள் சீரமைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here