கைலாசா நாட்டிற்கு ஆன்லைனில் பாஸ்போர்ட் வழங்கி வருவது போன்று 9 வகையான பொற்காசுகளை வெளியிட்டு தான் ஒரு தனி அரசாங்கம் என்று சாதனை படைத்து உள்ளார்…
கர்நாடகாவில் பிடதி, குஜராத்தில் அகமதாபாத் நகரங்களில் பெரிய அளவில் ஆசிரமங்களை நடத்திவந்தவர் திருவண்ணமலையை சேர்ந்த நித்தியானந்தம். கிரீன் மேட் உதவியுடன் தான் கைலாசா என்ற பெயரில் இந்துக்களுக்கு தனி நாடு உருவாக்கி விட்டதாக கூறி, அதற்கு என்று ஆன்லைனில் தனியாக இ-பாஸ்போர்ட்டும் வழங்கி வருகிறார்.
அண்மையில் கைலாசா நாட்டிற்கு என்று ரிசர்வ் பேங்க் இருப்பதாக அறிவித்தார்..! கொடியை அறிவித்தார்..! 300 பக்க பொருளாதாரக் கொள்கையை அறிவித்தார்..!
கைலாச நாட்டின் பெயரில் நாணயங்களை வெளியிடுவதாக அறிவித்து, இந்து கடவுள் படங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 9 வகையான பொற்காசுகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நகைகடைகளில் இருக்கும் தங்க காசு போல 2.91 கிராம் எடை கொண்ட தங்க நாணயம் கால் பொற்காசு என்றும், 5.83 கிராம் எடையுள்ள தங்க நாணயம் அரை பொற்காசு என்றும், 8.74 கிராம் தங்க நாணயம் முக்கால் பொற்காசு என்றும் அறிவித்துள்ளார் நித்தியானந்தம்.
11.66 கிராம எடையுள்ள தங்க நாணயம் ஒரு பொற்காசு என்றும், 23.32 கிராம் தங்க நாணயத்தை 2 பொற்காசுகள் என்றும், 34.99 கிராம எடையுள்ள தங்க நாணயத்தை 3 பொற்காசுகள் என்றும் அறிமுகப்படுத்திய நித்தியானந்தம், 46.65 கிராம எடையுள்ள தங்க நாணயத்தை 4 பொற்காசுகள் என்றும், 58.31 கிராம் தங்க நாணயம் 5 பொற்காசுகள் என்றும் 116.63 கிராம் எடை கொண்ட தங்க நாணயத்தை 10 பொற்காசுகள் என்றும் வெளியிட்டார் நித்தியானந்தம்.
அவர் வெளியிட்ட நாணயங்களில் அவர் இருப்பதாக கூறிக்கொள்ளும் கைலாசா நாட்டின் பெயரோ, ராஜ முத்திரையோ, அதன் மதிப்போ குறிப்பிடபடவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு நாடும் தன்னிடம் உள்ள அன்னிய செலவாணி கையிருப்புக்கு நிகரான பணமதிப்பை அடிப்படையாக கொண்டுதான் ரூபாய் நோட்டுக்களையோ, நாணயங்களையோ வெளியிட முடியும் என்பது தான் விதி. இது இல்லாமல் வெளியிட்டால் கள்ள நோட்டு வெளியிட்ட குற்றச்சாட்டுக்குள்ளாக நேரிடும். ஆனால் கைலாசா நித்தியானந்தம் அன்னிய செலவாணி கையிருப்பு மிக அதிகம் இருப்பதாக கூறியுள்ளார்..
அதே போல ராஜமுத்திரை என்று தங்க சங்கிலியில் கோர்க்கப்பட்ட தனது உருவத்துடன் கூடிய தங்க டாலர் ஒன்றை அறிமுகப்படுத்தினார் நித்தியானந்தம்.
நாடே கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் புது புது அறிவிப்புகள் மூலம் கைலாசா நாட்டை மக்கள் மனதில் நிலை நிறுத்த நித்தியானந்தம் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post