அயோத்தியில் ராமர் கோயிலுக்காக தவு தயால் மற்றும் இஸ்லாமியரான இக்பால் மிஸ்த்ரி என்பவர்கள் 2,100 கிலோ எடையுள்ள மணியை வடிவமைத்துள்ளனர். இதன் ஒலி, 15 கி.மீ வரை கேட்கக்கூடியது எனக் கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஜலேசர் மாவட்டத்தைச் சேர்ந்த தவு தயால், தனது குழுவினருடன் சேர்ந்து 30 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவத்தில் கோவில் மணிகளை செய்யும் தொழிலை செய்துவருகிறார். தவு தயாலின் நண்பரும், சக கலைஞருமான இக்பால் மிஸ்த்ரி தான், அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கு பிறகு அதிகமாக பேசப்படுபவர். ஆம், இஸ்லாமியரான இவர், ராமர் கோயிலுக்காக 2.1 டன் (2100 கிலோ) எடையுள்ள மணியை வடிவமைத்துள்ளார். இந்த மணியின் ஓசை 15 கி.மீ தொலைவு வரை கேட்கும் என கூறப்படுகிறது.
தவு தயால், இக்பால் மிஸ்திரி இருவரும் இணைந்து இவ்வளவு எடைகொண்ட பெரிய மணியை தயார் செய்தது இதுவே முதன்முறையாகும். இது குறித்து 50 வயதான தவு தயால் கூறுகையில், ‛இவ்வளவு பெரிய அளவிலான ஒரு மணியில் நீங்கள் பணிபுரியும் போது, சிரமத்தின் அளவும் பல மடங்கு அதிகரிக்கும். பல மாதங்கள் நீடிக்கும் இந்த செயல்பாட்டில் சிறு தவறு நிகழாமல் இருப்பது மிகவும் கடினம். இதை ராமர் கோயிலுக்காக உருவாக்குகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனாலும், தவறிழைக்க கூடாது என்ற பயமும் எங்கள் மனதில் இருந்தது.’ இவ்வாறு அவர் கூறினார்.
இக்பால் மிஸ்த்ரி கூறியதாவது: மணி செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், உருக்கிய உலோகத்தை ஊற்றுவதில் 5 விநாடி தாமதம் நிகழ்ந்தாலும் முழு வேலையும் வீணாக போய்விடும் அபாயம் இந்த வேலையில் இருக்கிறது. உருவாக்குவதில் எங்களுக்கு நம்பிக்கையிருந்தாலும், ஒரு விதமான பதற்றமும் இருந்தது. இப்போது இது சிறந்த முறையில் உருவாகியுள்ளது. இந்த மணியின் ஒலி 15 கிலோமீட்டர் தொலைவுக்கு கேட்கக்கூடியது. இது தனித்தனியான பாகங்களைக் கொண்டு பொருத்தப்படவில்லை. மொத்தமாக உலோகக் கலவையால் ஒரே பொருளாக உருவாக்கப்பட்டது என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், லெட், டின், இரும்பு மற்றும் பாதரசம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post