அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்ததை, ஹிந்துக்கள் கொண்டாடி வரும் நிலையில், அதற்கு இணையான மகிழ்ச்சியை முஸ்லிம்களும் தெரிவித்து உள்ளனர்.
அயோத்தியைச் சேர்ந்த, சன்னி முஸ்லிம் சமூக அமைப்பின் தலைவரான, ராஜா ரயீஸ் கூறியுள்ளதாவது: ராமரை நாங்கள், ‘இமாம் இ ஹிந்த்’ எனப்படும், இந்தியாவின் மதகுருவாக கருதுகிறோம். பூமிபூஜை நடப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். கொரோனா காரணத்தால், கோவில் கட்டுமானம் நடைபெறும் இடத்துக்கு தற்போது செல்ல முடியவில்லை. நாங்களும், கரசேவகர்கள் தான். கோவில் கட்டுமானத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில், சகோதரத்துவத்தின் அடையாளமாக விளங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோல், பல்வேறு முஸ்லிம் தலைவர்கள், தனிநபர்களும், கோவில் கட்டுமானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது: ராமர் கோவில் இயக்கத்தை, ஹிந்து – முஸ்லிம் இடையேயான பிரச்னையாக சிலர் கூறி வருகின்றனர். தற்போது நடந்துள்ள பூமி பூஜை, அதுபோன்றவர்களின் முகத்தில் விழுந்த அடியாகும். பூமி பூஜையை, நாங்கள் இரட்டிப்பு ஈத் விழாவாக கருதுகிறோம். அயோத்தி ராமர் கோவில், ஹிந்து – முஸ்லிம் மக்களிடையேயான சகோதரத்துவத்தின் அடையாளமாக எப்போதும் விளங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post