”ராமர் தனது வாழ்க்கை முழுவதும் பல விதமான கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், எப்போதும் அமைதியாகவும், ஆனந்தமாகவும் உத்தம மனிதராக வாழ்ந்தவர். அவரை போன்ற உயர்ந்த மனிதர்கள் தான் நாட்டுக்கு தேவை” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு சத்குரு தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் நடக்கும் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை என்பது நாட்டில் நடக்கும் மகத்தான ஒரு நிகழ்ச்சி. ஏனென்றால், உலகில் பல மனிதர்கள் வாழ்ந்து மறைகின்றனர். ஆனால், சிலர் மட்டுமே நம் மனதிலும் இதயத்திலும் நீங்காத இடத்தை பிடிக்கின்றனர். அந்த வகையில், நம் நாட்டில் சிவன், ராமர், கிருஷ்ணர், புத்தர் போன்ற மகத்தான மனிதர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகும் நம் உள்ளத்தில் நீங்காத இடம்பிடித்துள்ளனர். இது ஒரு கடவுள் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல.
ராமர் ஒரு மனிதராக பிறந்தார். மனிதராக வாழ்ந்தார். மனிதராக இறந்தார். ஆனால், அவர் தனது அற்புதமான குணநலன்களால் புருஷோத்தமனாக வாழ்ந்தார். மனிதர்களுக்குள் உத்தமமாகவும் உயர்ந்த தன்மையிலும் வாழ்ந்த மனிதனை புருஷோத்தமன் என கூறுவோம். அரசனாக இருந்த ராமர் ஒரு சிறு வாக்குறுதியால் அரசாட்சியை துறந்து காட்டுக்கு சென்றார். அவருடைய மனைவியையும் ஒருவர் கடத்தி சென்றார். சீதையை மீட்க போர் புரிந்து ராவணனை வதம் செய்தார்.
பின்னர், எதிரியாக இருந்தாலும் ராவணன் மிகப்பெரிய சிவ பக்தனாக இருந்த காரணத்தால் ராமர் அவரை கொன்றதற்காக ஒரு வருடம் பிராயச்சித்தம் மேற்கொண்டார். தனது வாழ்க்கையில் பல விதமான கஷ்டங்களை சந்தித்தாலும் அவர் தனது செயலில் எவ்வித கோபமோ வெறுப்போ இன்றி செயல்பட்டார். உள்நிலையில் அமைதியாகவும், சமநிலையாகவும், ஆனந்தமாகவும் வாழ்ந்தார். ராமரை ஒரு தனி மனிதராக பார்க்கக் கூடாது, பல அரிய குணங்களை ஒட்டுமொத்தமாகக் கொண்ட ஒரு உத்தமராகவே பார்க்க வேண்டும். இது போன்ற உயர்ந்த குணநலன்களுடன் இருக்கும் மனிதர்கள் தான் நமக்கு எப்போதும் தேவை.
500 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து படையெடுத்து வந்தவர்கள் நம் கோவில் களை இடித்து நாசம் ஆக்கினார்கள். இதனால், நம் நாட்டின் ஆன்மாவே சற்று காயம்பட்டது. ரணமாக இருந்த அந்த காயம் இப்போது ராமர் கோவில் கட்டுமானம் மூலம் ஆறி இருக்கிறது. இரு சமூகங்களுக்கு இடையே நடந்த தேவையற்ற மோதல்கள் இதன்மூலம் முடிவுக்கு வந்து உள்ளது. ஏராளமான மக்களின் மனங்களும் இதயங்களும் குளிர்ந்திருக்கின்றன. இன்று கொண்டாடும் அதே வேளையில் தேசப்பற்றும் ஒற்றுமையும் உயிர்த்தெழுவதை முழு தேசமும் கொண்டாட வேண்டும். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.
Discussion about this post