‘ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியை நேரில் காண, அயோத்திக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம்’ என ராமர் கோவில் அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக, பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும், மசூதி கட்டுவதற்கு வேறு ஒரு இடத்தை, உ.பி., மாநில அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, வரும், 5ல், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எனப்படும் அடிக்கல் நாட்டு விழா, கோலாகலமாக நடக்க உள்ளது.
இந்நிலையில் ராமர் கோவில் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை: ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கான இயக்கத்திற்கு கோடிக்கணக்கான ராமர் பக்தர்கள் பேராதரவு தந்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க, பூமி பூஜை நிகழ்ச்சியில், கலந்து கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் இயற்கையான விருப்பம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் அயோத்தி வர வேண்டாம். அடிக்கல் நாட்டு விழா டிவி, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். மக்கள் வீட்டிலிருந்து டிவியில் காணலாம், இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post