திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் உதவி கமிஷனர் மற்றும் நகை சரிபார்ப்பு அதிகாரியாக இருந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. 1980ல் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தார். திருச்செந்துார் கோவில் நிர்வாக குழுவில் உள்ளூரை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் பாலகிருஷ்ணன்; குழு உறுப்பினராக திருச்செந்துார் தொகுதி அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., கேசவஆதித்தன் இருந்தார். இப்போது கோவில்களில் உண்டியல் எண்ணும்போது முழுக்க வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ‘சிசி டிவி’ கண்காணிப்பு கேமராக்கள் கண்கொத்தியாய் நாலாபுறமும் நிற்கின்றன. அந்த காலத்தில் அத்தகைய வசதிகள் இல்லை.
கடந்த, 1980 நவம்பர், 26 புதன்கிழமை, திருச்செந்துார் கோவில் உண்டியல் எண்ணும் பணி நடக்கிறது. அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை காலையில் பணிக்கு வரும் முன்பாகவே ஒரு உண்டியல் திறக்கப்பட்டிருந்தது. இதனை சுப்பிரமணிய பிள்ளை ஏற்கவில்லை. தமது எதிர்ப்பை தெரிவித்தார். நிர்வாக குழுவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அங்கிருக்க விருப்பமில்லாமல் கோவில் வளாகத்தில் உள்ள விடுதி அறைக்கு சென்றார். அங்கும் சென்ற நிர்வாக குழுவினர் அவரை கடுமையாக தாக்கினர். படாத இடத்தில் பட்டதில் சம்பவ இடத்தில் இறந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டது போல பாத்ரூம் குழாயில் துாக்கு போட்டதாக,’செட்டப்’ செய்தனர். பின்னர் வெளியே வந்தனர்.
பாத்ரூமை சுத்தம் செய்யப்போன தொழிலாளி, அதிகாரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து தகவல் சொன்னார். நிர்வாக குழுவினர் ஒரு காரில் அவரது உடலை துாக்கிப்போட்டு திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த பெண் டாக்டர், பார்த்து விட்டு அவர், ‘இறந்து விட்டாரே, தாக்கியது போல உள்ளதே…’ என, விசாரித்தார்.
அப்போது அங்கு சென்றிருந்த நிர்வாக குழுவினர் சொல்லாமல் கொள்ளாமல் மருத்துவமனையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். இதனை அங்கு கடை வைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் தேவதாஸ், பார்த்தார். சுப்பிரமணிய பிள்ளை இறப்பில் சந்தேகம் இருக்கிறது. இவர்கள் ஏன் ஓட்டம் பிடித்தார்கள் என பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்த சம்பவத்தை செமையாக பயன்படுத்திக்கொண்டார். சுப்பிரமணிய பிள்ளை வரும் முன்னரே திறக்கப்பட்ட உண்டியலில் இருந்த வைர வேலை காணவில்லை. அதற்கும் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கும் தொடர்பு உள்ளது என நெருப்பை அள்ளிப்போட்டார். தமிழகம் பற்றிக்கொண்டது.
எம்.ஜி.ஆர் நிலை குலைந்தார். திருச்செந்துாருக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். ஒரு முதல்வர் நேரில் வந்து ஆய்வு செய்வதெல்லாம் அப்போது நடந்திருக்கிறது. இப்போது இருவர் கொலை செய்யப்பட்டால் கூட முதல்வர் வர முடிவதில்லை. வேறு வழியில்லாமல் எம்.ஜி.ஆர்., இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சி.ஜே.ஆர்., பால் தலைமையில் ஒரு நபர் கமிஷன்அறிவித்தார்.
பால் கமிஷன் விசாரணையால் பரபரப்புகள் அப்போதைக்கு தள்ளிப்போடப்பட்டன. பால் கமிஷன் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கை எம்.ஜி.ஆர்., தலையில் இடியாய் விழுந்தது. ஆம்… பால்கமிஷன் அறிக்கையில், சுப்பிரமணிய பிள்ளை இறப்பு தற்கொலை அல்ல என முடிவை தெரிவித்தது. எம்.ஜி.ஆர்., அறிக்கையை சட்டசபையில் வெளியிடாமல் காலம் தாழ்த்தினார். நீதிபதியோ அறிக்கை கொடுத்த கையோடு அமெரிக்காவிற்கு கிளம்பி விட்டார்.
இப்போது கருணாநிதி காட்டில் மழை. மீண்டும் களம் புகுந்தார். மதுரையில் இருந்து திருச்செந்துாருக்கு நீதி கேட்டு நெடும்பயணம் அறிவித்தார். 1982 பிப்., 15ல் மதுரையில் நடைபயணம் துவங்கி, 22ல் திருச்செந்துாரில் நிறைவு செய்தார். இருப்பினும் அறிக்கைமீது நடவடிக்கையில்லை.
பார்த்தார்… அப்போது தமிழக அரசின் மொழிபெயர்ப்பு பிரிவில் அதிகாரியாக இருந்த சதாசிவன் மற்றும் சண்முக நாதன் ஆகியோரை கையில் எடுத்தார். பால் கமிஷன் அறிக்கை கருணாநிதியின் கைக்கு வந்தது. அறிக்கையை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார் கருணாநிதி. அதிர்ந்த எம்.ஜி.ஆர்., இரு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தார். அந்த வழக்கில் கருணாநிதியும் குற்றம் சாட்டப்பட்டவர்.
அந்த அதிகாரி சண்முகநாதன் தான், கருணாநிதி மறைவும் வரையிலும் அவர்பின்னால் நின்று குறிப்பெடுக்கும் உதவியாளராக மாறிப்போன சண்முகநாதன். இப்படி பரபரப்புகளுக்கு பஞ்சமில்லையென்றாலும் யார் மீதும் அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டசபையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சட்டசபையில் கருணாநிதியின் திருச்செந்துார் நடைபயணத்தை கிண்டலடித்த ஒரு அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வைரவேல் காணவில்லை என கருணாநிதி திருச்செந்துார் சென்றதால், முருகனே அங்கு இருக்க பிடிக்காமல் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திற்கு வந்துவிட்டார் என்றார் சிரிப்பை ஏற்படுத்தியபடி.
அதற்கு பதிலளித்த கருணாநிதி, ‘அய்யய்யோ…நான் வைரவேல் தான் காணவில்லை என்று நினைத்தேன். முருகன் சிலையையும் காணவில்லையா…’ என்றார். தமக்கே உரிய கிண்டலில்.
கருணாநிதி, மதுரையில் இருந்து முழுவதும் நடக்கவில்லை. இடையில் முடித்துக் கொண்டார் என்றும் கூறுவர் உண்டு. நடைபயணத்தின்போது கருணாநிதியுடன் தங்கியிருந்த ஆற்காடு வீராசாமி, அருப்புக்கோட்டையில் தங்கியிருந்த அறையில் பால் என நினைத்து பினாயிலை குடித்த கதையை இன்னமும் நினைவில் வைத்துள்ளார்கள்.
கோவில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை, உண்டியலில் பணம் எண்ணும்போது சுமார் 2,800 ரூபாயை கையில் மறைத்துக்கொண்டார் என ஆவேசத்தில் தான் அவரை நிர்வாக குழுவினர் தாக்கியதாகவும் தகவல் உண்டு. அப்படியானால் வீரப்பன், வைரவேல் எல்லாம் எங்கிருந்து வந்தது.
வழக்கமாக கோவிலுக்கு வைரம், தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வழங்குபவர்கள், அதிகாரிகளிடம் கொடுத்து நன்கொடை நோட்டில் பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் அத்தகைய வைரவேல் எதுவும் பதிவானதாக பட்டியலில் இல்லை. உண்டியலில் பணம், சிறிய நகை, நாணயங்களைத் தான்போட முடியுமே தவிர, வைரவேலை உண்டியலில் போடும் வசதியோ, பழக்கமோ அப்போது இல்லை. எனவே வைரவேல் என்பது கருணாநிதியின் கற்பனைகூட இருக்கலாம்.
ஆனால், இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கந்தக் கடவுள் முருகன் சும்மாயிருக்கவில்லை. சுப்பிரமணிய பிள்ளை இறந்தது 1980 நவ.,26. இரண்டு ஆண்டுகள் வாய்தா கொடுத்தார் முருகன். 1982ல் அதே நவம்பர் 26ல் துாத்துக்குடி மாவட்டம் ‘எப்போதும்வென்றானில்’ ஒருகார் மீது, ‘வேல்முருகன்’ என்றபெயர் பொறித்த லாரி மோதிய விபத்தில் காரில் இருந்த கேசவஆதித்தன் இறந்தார்.
இறந்த கேசவ ஆதித்தன் வேறு யாருமில்லை. திருச்செந்துார் சட்டமன்ற உறுப்பினர். சுப்பிரமணிய பிள்ளையை நிர்வாக குழு தலைவர் பாலகிருஷ்ணனோடு சேர்ந்து தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர். சுப்பிரமணிய பிள்ளை இறந்த அதே நாளில், ‘வேல்முருகன்’ லாரி மோதிய சம்பவத்தில் எம்.எல்.ஏ.,கேசவ ஆதித்தன் இறந்த சம்பவம் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
சரி… சுப்பிரமணிய பிள்ளைதான் எந்த குற்றமும் செய்யாதவர் தானே. அவரைதம் கோவில் வளாகத்திலேயே இறப்பதற்கு எப்படி முருகக்கடவுள் அனுமதித்தார் என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு முன்பு சுப்பிரமணிய பிள்ளை சுவாமி மலைகோவிலில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு கோவில் பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. எனவே சுவாமிமலை கோவில் கணக்கை இரண்டு ஆண்டுகள் கழித்து தீர்த்து கட்டியுள்ளார் எம்பெருமான் முருகன் என கூறி, ‘ட்விஸ்ட்’ வைத்தார் திருச்செந்துார் பிரமுகர் ஒருவர்.
இதையெல்லாம் சொன்ன திருச்செந்துார் பத்திரிகையாளர் ஒருவர், ‘கருப்பர் கூட்டம் போல யார் வேண்டுமானாலும் முருகனை வசை பாடலாம். எள்ளி நகையாடலாம். கந்த சஷ்டிக்கான நேரம் பார்த்துக்கொண்டிருப்பான் முருகன். ‘எப்போதும்வென்றானில்’ ஒருடிப்பர் லாரியை தமது வாகனமாக மாற்றியவன் இந்த மயில்வாகனன்’ என்றார்.
திருச்செந்துாரில் சுப்பிரமணியபிள்ளை இறந்த சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மருத்துவக்கல்லுாரியில் பயின்ற குமாரசாமி ஆதித்தன் என்பவர் போர்க்கொடி துாக்கினார். எனவே அரசு அவரை மதுரை மருத்துவக்கல்லுாரிக்கு இடம்மாற்றியது அரசு. தொடர்ந்துபோராட்டங்களில் ஈடுபட்டார்.
கடந்த, 2009 திருச்செந்துார் இடைத்தேர்தலில் கூட இது குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டார் குமாரசாமி ஆதித்தன். இந்த சம்பவத்தால், அரசின் நடவடிக்கைகளால் திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது நலத்திற்கு போராடியவர் குமாரசாமி ஆதித்தன்.
கடந்த, 1980களில் அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை குறிவைத்துதான் கருணாநிதி தாக்குதலில் ஈடுபட்டார். சட்டசபையில் கூட அவரை விமர்சனம் செய்தார்.வீரப்பன் என்றால் வைரவேல் என நினைவுக்கு கொண்டு வந்தார்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற வாக்கிற்கு இணங்க, ஆர்.எம்.வீரப்பன் பின்னர் தனிக்கட்சி துவக்கினார். கருணாநிதியுடன் நெருக்கமானார். திருநெல்வேலியில் ஆர்.எம்.வீரப்பன் நிறுவிய ஒரு எம்.ஜி.ஆர்., சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். அந்த எம்.ஜி.ஆர்., இரட்டை இலையை காண்பிக்க மாட்டார்.
Discussion about this post