ஒடிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தை பக்தர்கள் இன்றி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் விழாவை நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு விழாக்கள் நடத்துவதற்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனால் தமிழ்நாட்டிலும், கேரளா மற்றும் ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களிலும் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுவிழாக்கள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. ஒடிசாவின் பூரி நகரில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் உள்ளது. 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் சிறப்பாக நடக்கும். கோவிலின் தேரோட்டம் படாதண்டா என்றழைக்கப்படும்.
பூரி கோவிலின் தேரோட்ட திருவிழா நாளை நடக்கவிருந்தது. தற்போது கொரோனா பரவுதல் அதிகரித்து வரும் நேரத்தில், கோவில் தேரோட்டம் நடந்தால் சுவாமியை தரிசிக்க லட்சக் கணக்கில் பக்தர்கள் கூட்டம் கூடும். கொரோனா பரவ அதிகமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை தடைவிதிக்க வேண்டும் என அம்மாநிலத்தின் ஒடிசா விகாஷ் பரிசத் என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்தது. இந்த மனுவின் விசாரணையில் கோவில் தேரோட்டத்தை நடத்த தடை விதிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து 2 அமைப்புகள் சுப்ரீம்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன. இந்தச் சூழலில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் தொடர்பாக ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் மத்திய சொலிசிட்டர் துஷார் மேத்தா மனுத்தாக்கல் செய்தார்.
அதில் கூறியதாவது : பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நூற்றாண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனாவால் அதனை தடை செய்வது பக்தர்களின் இறை நம்பிக்கையில் தலையிடுவதாகும். வேண்டுமானால், பக்தர்களுக்கு தடை விதித்து தேரோட்டத்தை நடத்த அனுமதிக்கலாம். எனவே ஜூன் 18 ல் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டுகிறோம். ஜெகந்நாதர் ஒரு வருடம் வெளியே வராவிட்டால் 12 வருடங்கள் வரமுடியாது. இது மரபாக இருந்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ளும். இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில், பூரி கோவிலில் தேரோட்டம் நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி வழங்கியது. ஆனால் சில முக்கிய கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில், பக்தர்கள் இன்றி, தேரோட்ட விழா நடத்தலாம். ஆனால் சுகாதார பிரச்னையில் மத்திய மற்றும் மாநில அரசு எவ்வித சமரசமும் செய்யகூடாது. 3 கி.மீ தூரம் வரை சமூக இடைவெளியை பின்பற்றவும், கட்டுப்பாடுகளை பின்பற்றவும் அரசு அறிவுறுத்தியது. தொடர்ந்து, ரத யாத்திரை நாளில் பூரி நகரத்தை முற்றிலுமாக மூடினால் கோவில் சேவகர்களை தவிர பக்தர்கள் வெளியே வரமாட்டார்கள். அதனால் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post