கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம்,தீர்த்தம் கொடுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், சினிமா ஹால்கள்,வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
* கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், வழிபாட்டுத் தலங்களுக்கு உள்ளே செல்வதற்கு முன்பாக பக்தர்கள் தங்களது, கை, கால்களை தண்ணீரில் கழுவ வேண்டும். சோப்பு போட்டு கழுவலாம். வழிபாட்டு தலங்களுக்கு உள்ளே பிரசாதம் வழங்க கூடாது. அதேபோல, புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்படக் கூடாது. புனித நூல்கள் மற்றும் சிலைகள் ஆகியவற்றை தொடக்கூடாது.
* 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு மற்றும் பிற உடல் உபாதைகள் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மொத்த இருக்கைகளில் 50 சதவீத அளவிற்கு வாடிக்கையாளர்களை ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய மெனு கார்டுகள், ஓட்டல் ஊழியர்கள் பயன்படுத்தும் முகக்கவசங்கள், கையுறைகளை அப்புறப்படுத்தப்படுவது உறுதிபடுத்த வேண்டும்.
* ஷாப்பிங் மால்கள் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வணிக வளாகங்களில் பெரிய கூட்டங்கள், மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தவும், சினிமா ஹால்கள், விளையாட்டு அரங்குகளையும் திறக்கவும் தடை தொடர்கிறது.
இது போன்ற சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Discussion about this post