ஜோதிட சாஸ்திரத்தின் பலன்களை அறிய நமக்கு பல்வேறு விதமான வழிமுறைகளை ஜோதிடக்கலை வகுத்துத் தந்துள்ளது. ராசி, நட்சத்திரம், கிழமை, தேதி, மகா தசைகள் என்று எத்தனையோ வகையில் நாம் பலன்களை தெரிந்துகொள்கிறோம். அந்த வகையில் குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் பிறக்கும்போது என்ன பலன்கள் பொதுவாக அமையும் என்பதை நாம் அறியலாம்.
விதி மதி கதி
ஜாதகப் பலன்களை அறிய விதி, மதி, கதி என்ற மூன்று ஸ்தானங்களை பார்ப்பார்கள். அதாவது, விதி என்றால் நாம் பிறந்த லக்னம், மதி என்றால் நாம் பிறந்த ராசி. கதி என்றால் சூரியன் இருக்கும் ராசி. சூரியன் ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒவ்வொரு ராசியில் பிரவேசிப்பார். அதை வைத்தே அந்த மாதப்பிறப்பு ஏற்படுகிறது. நாம் இப்போது சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை பார்ப்போம். சித்திரை மாதப்பிறப்பு என்பது சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலமாகும். அன்றுதான் தமிழ் வருடப் பிறப்பாகும். சூரியன் இந்த மாதம் முழுவதும் உச்ச பலத்துடன் இருப்பார். பொதுவாக ஜாதக கட்டத்தில் ஒரு கிரகம் உச்ச பலத்துடன் இருப்பது சிறப்பானதாகும். அந்த வகையில் இந்த மாதம் பிறப்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்.
அதிகாரம், தலைமைப் பதவி, சுதந்திர உணர்வு, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, உயர்ந்த லட்சியங்கள் ஆகியவற்றை தரக்கூடிய நவநாயகர்களில் நடுநாயகமாக வீற்றிருக்கும். சூரிய பகவான் உச்ச நிலையில் இருக்கும்போது உங்கள் பிறப்பு அமைவதால் எந்தத் துறையில் இருந்தாலும், எந்த பொறுப்பு வகித்தாலும் அந்தத் துறையில் சூரியன் பிரகாசிப்பதைப்போல செயல்படுவீர்கள். அதிகாரப் பதவி, அந்தஸ்துள்ள பதவி, அரசியல் தலைமை போன்றவற்றில் உள்ளவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு உங்களுக்குத் தேடிவரும். கொண்ட கொள்கையில் உறுதி, மனதில் பட்டதைப் பேசும் பாங்கு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத குணம், வீரதீர செயல்களில் ஆர்வம், ஒரு காரியத்தை எப்படியும் முடித்துக் காட்ட வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம், அதனால் உண்டாகும் கோபதாபங்கள், இதனால் சமுதாயத்தில் உங்களுக்கு இரண்டுவிதமான பேர் இருக்கும்.
ஒன்று உண்மையானவர், நேர்மையானவர், மறைத்துப் பேசாதவர் என்று சொல்வார்கள். சிலர் கர்வி, அகம்பாவம் உள்ளவர், மூர்க்கன் என்றும் சொல்வார்கள். ஆனால், இதனால் உங்கள் தனித்தன்மையை மாற்றிக்கொள்ள மாட்டீர்கள். யதார்த்தவாதி வெகுஜன விரோதி என்பது உங்களுக்கு மிகவும் பொருந்தும். உங்கள் நம்பகத்தன்மை காரணமாக சமூகத்தில் உங்களுக்கு நன்மதிப்பு கூடும். உங்களுக்குள்ள முக்கிய குறை முன்கோபம், மூக்கின்மேல் கோபம்தான்.
சித்திரை மாதம் சூரியன், செவ்வாய் வீடான மேஷத்தில் உச்சம் இரண்டுமேதான். இந்த கோபம் என்ற ஜ்வாலை, உங்களிடத்திலுள்ள சிறு குறைதான். கோபம் என்பது மனிதனுக்கு உள்ள பல்வேறு குணாதிசயங்களில் ஒன்றுதான். சிலருக்கு குறைவாக இருக்கும். பலர் வெளிக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அந்த விஷயத்தில் நீங்கள் எல்லாவற்றையும் கொட்டி விடுகிறீர்கள். சந்திரன், புதன் போன்ற கிரகங்கள் சாதகமாக இருந்தால் நீங்கள் சமயோசிதமாகச் செயல்பட வழி வகுக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருப்பீர்கள்.
தனம் குடும்பம் வாக்கு
தனம் என்னும் பண விஷயத்தில் சந்திரன், குரு சாதகமாக இருக்கப் பிறந்தவர்கள் கையில் பணப்புழக்கம் இருந்துகொண்டே இருக்கும். பெண்கள் மூலம் அதிக ஆதாயம் அடைவார்கள். தாயார், உடன்பிறந்தோரும் இவருக்கு உதவுவார்கள். குடும்பத்தில் சில வருத்தங்கள், கருத்து வேறுபாடுகள் வந்தாலும் தன் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள். இவர்களிடம் ரகசியம் தங்காது. திட்டம் போட்டு குடும்பத்தை நடத்துவதில் வல்லவர்கள். இவர்களை நம்பி எந்தக் காரியத்திலும் ஈடுபடலாம். செலவு செய்யும் விஷயத்தில் தங்கள் தேவைக்கு, சந்தோஷத்திற்கு செலவு செய்ய யோசிக்க மாட்டார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் ஒரு நேர்மை வாக்கு சுத்தம் இருக்கும். குறித்த காலக் கெடுவுக்குள் எதையும் முடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். சொல் ஒன்று செயல் ஒன்று என்பது இவர்களிடம் அறவே இருக்காது.
திட தைரிய வீரியம்
திடச்சித்தமான எண்ணம் உடையவர்கள். எதிலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார்கள். அதிகாரம் செய்து காரியம் சாதிக்கும் இடத்தில் அந்த தோரணையோடு நடந்து கொள்வார்கள். இடம், பொருள், ஏவல் அறிந்து காய் நகர்த்துவதில் இவர்களை மிஞ்ச வேறொருவர் கிடையாது. சோதனைக் காலங்களில் துவண்டு போகாமல் அதிலிருந்து மீண்டு வென்று காட்டுவார்கள். ஆக்கும் சக்தி அதிகம் உண்டு. அழிவு வேலைகளில் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். இவர்களுக்கு தான் என்ற எண்ணம், மமதை இருக்கும். தம்மை மற்றவர்கள் அண்டி இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.
சொத்து சுகம்
எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள். அனுபவ அறிவும், படிப்பறிவும் இவர்களுக்கு கை கொடுக்கும். அரசியல், அதிகாரப் பதவிகள் மூலம் தனம் சேர்த்து சொத்து வாங்கும் யோகம் உள்ளவர்கள். பெண்கள் மூலம் இவர்களுக்கு சொத்து கிடைக்கும். அதாவது தாயார், சகோதரி, மனைவி வகையில் சொத்துகள் சேரும். ஆறு, ஏரி, குளம், கடல், மலை வாசஸ்தலங்களில் சொந்த வீடு, நிலம் அமையும். உஷ்ண நம்பந்தமான தேக அமைப்பு உள்ளவர்கள் அடிக்கடி இவர்களுக்கு ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். மறதி நோய், நரம்புக் கோளாறுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. கண் பார்வை கோளாறுகள் இருக்கும். வயிற்றுவலி, மூலம் போன்ற உபாதைகள் அடிக்கடி வந்துபோகும். சந்திரன் சரியாக அமையவில்லை என்றால் சைனஸ், தலை பாரம், சளி, அடுக்குத் தும்மல் போன்றவற்றால் அவதிப்படுவார்கள்.
பூர்வ புண்ணியம் குழந்தைகள்
சூரியன், சந்திரன், சுக்கிரன், குரு போன்ற கிரகங்கள் நல்ல யோக அம்சத்தில் இருக்கப் பெற்றவர்கள். மிகவும் பாக்கியசாலிகள். இவர்கள் கைராசி மிக்கவர்கள். ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு சிவன் ஐயப்பன், ஐயனார், காளி, முருகன், காவல் தெய்வங்கள், கருப்பண்ண சாமி, உக்கிர தெய்வங்களை உபாசனை செய்வதில் மனம் லயிக்கும். நம் உடம்பில் உள்ள மூலாதார சக்கரங்களை எழுப்பி அதன்மூலம் ஆன்ம பலம் சக்தி கிடைப்பதற்கான யோகம் உடையவர்கள். இவர்களுக்கு ஆண், பெண் வாரிசுகளுக்கு குறைவு இருக்காது. பிள்ளைகள் மூலம் பிரபலம், பெருமை அடையக் கூடியவர்கள். பிள்ளைகள் இவர்களுக்கு கடைசி வரை ஆதரவாக இருப்பார்கள். செல்வம் பல்கிப் பெருகும். கவலைகள் மறையும். இவர்களுக்கு E.S.P என்ற எதிர்காலத்தை கணிக்கக்கூடிய நடப்பவற்றை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் இயற்கையிலேயே அமைந்திருக்கும்.
ருணம் ரோகம் சத்ரு
கடன் பிரச்னைகளில் பெரிய அளவில் சிக்கல், தடுமாற்றங்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு. அவசிய, அவசர தேவைகளுக்காக கடன் வாங்கினாலும் அதை வாங்குவதற்கு முன்பே திருப்பி செலுத்த வேண்டிய வழியை முடிவு செய்துகொள்வார்கள். இவர்களின் வாழ்க்கையே மிகவும் திட்டமிட்ட ஒன்றாகும். எதிர்ப்புக்கள் இவர்களுக்கு அதிகம் இருக்கும் காரணம் இவர்கள் கறாராகப் பேசி பஞ்சாயத்து செய்து ஒரு சாரரின் எதிர்ப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். இருந்தாலும் அதனால் இவர்கள் சோர்ந்துபோய் விடமாட்டார்கள். எதிர்நீச்சல் அடிப்பது என்பது இவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்.
பயணங்கள் மனைவி கூட்டாளிகள்
பயணங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு. சிலருக்கு பயணங்களே வாழ்க்கையாகவும் அமைந்து விடுவதுண்டு. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் இயற்கையாக அமைகின்ற பயணங்களை தவிர, உல்லாசப் பயணங்கள் செல்வதில் அதிகம் விருப்பம் உடையவர்கள். இயற்கையை ரசிப்பவர்கள், தனிமையை விரும்புபவர்கள், அழகை, கலையை ஆராதிப்பவர்கள். பயணத்தின் மூலம் பல்வேறு வகையான அனுபவங்களை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் பெருமளவில் இருக்கும். கருத்து வேறுபாடுகள் வந்தாலும் மற்றவர்கள் இவர்களின் குணம் கருதி விட்டுக்கொடுத்துச் சென்று விடுவார்கள். வாழ்க்கைத்துணையை பொறுத்தவரை இவர்களுக்கு மனைவி மூலம் பல போக சுக பாக்கியங்களை அனுபவிப்பார்கள். இவர்களின் குறிப்பறிந்து மதியூகத்துடன் செயல்பட்டு நல்ல ரசனையான வாழ்க்கை வாழ இவர்கள் மனைவி துணைபுரிவார். பொதுவாக இவர்களுக்கு சுக்கிரன், சந்திரன் பலமாக இருந்தால் இவர்களின் தாம்பத்யம் ஒரு இனிமையான சங்கீதம்தான் என்றால் அது மிகையாகாது.
தசம லாப தொழில்
தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, ஆளுமைத்திறன் போன்றவற்றைப் பார்க்கும்போது உத்யோகம், வேலை அமைப்பில் அதிகாரம் செலுத்துகின்ற பதவிகள் இவர்களுக்கு கிடைக்கும். கூட்டுறவு சங்கங்கள், தொழிற்சங்கங்கள், சுயஉதவிக்குழுக்கள் போன்றவற்றை திறம்பட நடத்துகின்ற ஆற்றல் பெற்றவர்களாக விளங்குவார்கள். I.A.S., I.P.S., I.F.S., ராணுவம் போன்ற அரசு இயந்திரத்தை இயக்கும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். வியாபாரம், தொழில்கள் என்ற அமைப்பில் பல தொழில்களில் கால் பதித்து பெயரும், புகழும் அடையும் யோகம் உண்டு. நெருப்பு சம்பந்தமான அனைத்து தொழில்களிலும் இவர்கள் ஈடுபடலாம்.
உலோகங்களை உருக்கி செய்யும் வார்படத்தொழில், செங்கல் சூளை, பேக்கரி, தங்கம், வெள்ளி பித்தளை போன்ற உலோகங்களில் கலைநயம் மிக்க பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது. இரும்பு சம்பந்தமான வண்டி சம்பந்தமான, தொழில்கள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில், ஏற்றுமதி, இறக்குமதி, தண்ணீர் சம்பந்தமான வியாபாரங்கள், காய், கனி, பூக்கள், மீன்கள் போன்ற அழுகும் தன்மையுடைய பொருட்கள் வியாபாரம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட கட்டிட டெண்டர்கள் காண்ட்ராக்டர்களாக வருவதற்கு வாய்ப்பும், யோகமும் அதன்மூலம் பெயரும், புகழும், பெரும் தனமும் கிடைக்கப் பெறுவார்கள்.
Discussion about this post