திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப் பெயர்ச்சி விழா 29ஆம் தேதி நடைபெறாது – கோயில் நிர்வாகம் விளக்கம்!

0

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப் பெயர்ச்சி விழா 29ஆம் தேதி நடைபெறாது – கோயில் நிர்வாகம் விளக்கம்!

புதுச்சேரி ஒன்றியப் பகுதிக்கு உட்பட்ட காரைக்கால் அருகே அமைந்துள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயம், ஹிந்துமத பக்தர்களுக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தலத்தில், வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி, சனிப் பெயர்ச்சி விழா ஒவ்வொரு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

இந்தநிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின் கணிப்பின்படி மார்ச் 29, 2025 அன்று சனிப் பெயர்ச்சி நிகழும் என்ற தகவல் பரவியது. இதனால், அன்றைய தினத்தில் திருநள்ளாறு ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் மற்றும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும் எனக் கருதி, பக்தர்கள் முன்னதாகவே பயண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர். இந்த தகவல் அதிகமாகப் பரவியதுடன், சமூக வலைதளங்களிலும் சனிப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறும் எனவும் பேசப்பட்டது.

இதனால், பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தைத் தீர்க்கும் வகையில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில், “வாக்கிய பஞ்சாங்க முறைப்படி, திருநள்ளாறு ஆலயத்தில் நடைபெறும் அடுத்த சனிப் பெயர்ச்சி விழா 2026 ஆம் ஆண்டில்தான் நடைபெறும். வரும் மார்ச் 29ஆம் தேதி எந்தவிதமான சனிப் பெயர்ச்சி விழா நடைபெறாது. வழக்கமான தினசரி பூஜைகள் மட்டும் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் தவறான தகவல்களை நம்பி, தேவையற்ற குழப்பத்தில் ஆழாமல், கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்ற வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Facebook Comments Box