கடும் நிபந்தனைகளுடன் வரும் மண்டல, மகரவிளக்கு கால சீசனை நடத்த கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் அதிகமாகி வரும் நிலையில் வரும் நவ., பாதியில் துவங்கும் மண்டல,- மகர விளக்கு சீசன் சபரிமலையில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நேற்று திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் சபரிமலை சீசன் பற்றிய ஆலோசனை கூட்டம் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் வருவாய், போலீஸ், பொதுப்பணித்துறை, போக்குவரத்து, தேவசம்போர்டு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் மண்டல ,மகரவிளக்கு சீசனை கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி கொரோனா பாதிப்பில்லை என்ற (கோவிட்19 நெகட்டீவ்)’ சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழுடன் ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக் கப்படுவார்கள். ஒரு நாளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனை திறக்கப் படும். இங்கு பக்தர்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே பம்பை செல்ல அனுமதிக் கப்படுவர்.
பக்தர்கள் எண்ணிக்கை குறையும் என்ற காரணம் காட்டி கடைகள் எடுக்க வியாபாரிகள் முன்வராத பட்சத்தில் அரசு மற்றும் கூட்டுறவு, அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளை போல் சீசன் நடத்த முடியா விட்டாலும், கொரோனா பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு மண்டல, மகரவிளக்கு சீசனை நடத்த அரசு மற்றும் தேவசம்போர்டு எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது, என்று பந்தளம் மன்னர் பிரநிதி சசிகுமாரவர்மா கூறியுள்ளார்.
Facebook Comments Box