நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய வேதங்கள் நான்கும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும், பின்னர், கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்றதாகவும் செவிவழித் தகவலாக கூறப்பட்டு வருகிறது.
பின்னாளில், இந்தக் கோயிலுக்கு வந்த சமயக் குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் கோயில் தல புராணத்தில் கூறப்படுகிறது.
இதில் அப்பர் கதவைத் திறக்கவும், சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம். இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு விழாவானது ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றதையொட்டி, பிரதான கதவின் எதிரே அப்பர், சம்பந்தர் ஆகியோர் எழுந்தருள, இவர்களாக உருவகப்படுத்தப்பட்ட ஓதுவா மூர்த்திகள் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர்.
அப்போது, கோயில் கதவு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து திறக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
Discussion about this post