அயோத்தியில், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, பிரதமர் மோடி தலைமையில் நடந்து முடிந்தது. பல கோடி மக்கள் இந்த விழாவை, ‘டிவி’யில் பார்த்து பரவசமாயினர். இந்த நிகழ்ச்சிக்கு எந்த ஒரு குறையோ, பிரச்னை யோ வரக் கூடாது என்பதற்காக, பல வேலைகள் நடந்துள்ளன. இது வெளியே யாருக்கும் தெரியாது.
இந்த விவகாரத்தில் இரவு – பகலாக செயல்பட்டது, பிரதமர் அலுவலகம். என்னென்ன, எப்படி நடக்க வேண்டும் என்பதை, பிரதமர் தீர்மானித்தார். அதை செயல்படுத்தியது, பிரதமர் அலுவலகம். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கலந்து ஆலோசித்து, ராமர் கோவில் டிரஸ்ட் அங்கத்தினர்களுக்கு மட்டும் விழா தொடர்பான விபரங்களை தெரிவித்துள்ளனர். யார் யாரை விழாவிற்கு அழைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
மத தலைவர்கள், சாதுக்கள் ஆகியோரோடு, அயோத்தியில் உள்ள சன்னியாசிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ‘அரசுக்கு எதிராக பேசிய சாதுக்களையும் விழாவிற்கு அழையுங்கள்; விழாவுக்கு பின், யாரும் என்னை அழைக்கவில்லை என பேச்சு வரக் கூடாது’ என பிரதமர் கூறியதால், அவர்களும் அழைக்கப்பட்டனர். உத்தர பிரதேச அதிகாரிகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கு, பிரதமரின் முன்னாள் தலைமை செயலர் நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.
அயோத்தியின் கலெக்டர் அனுஜ் குமார் ஜாவிடம், ‘விழாவில் எந்த பிரச்னையும் வரக் கூடாது; அது உங்கள் பொறுப்பு’ என, அவருக்கு உத்தரவிடப்பட்டது.முக்கியமாக, ‘கொரோனா தொடர்பான பாதுகாப்பு அனைத்தும் மேற்கொள்ள வேண்டும்; இதில் எந்த பிரச்னையும் வரக் கூடாது’ எனவும் கலெக்டருக்கு சொல்லப்பட்டது. விழா முடியும் வரை, படு டென்ஷனில் இருந்தவர் அயோத்தி கலெக்டர் தான்.
Discussion about this post